நாகப்பட்டினம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எம் செல்வராஜ் இன்று அதிகாலை காலமானார்.
எம். செல்வராஜ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தவர் அக் கட்சியில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் கப்பலுடையான் கிராமத்தில் முனியன் - குஞ்சம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தவர் எம். செல்வராஜ். சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் தன்னை இணைத்து பணியாற்றி வந்த எம்.செல்வராஜ் திருவாரூர் திரு வி க அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில் பல பொறுப்புகளில் இருந்தவர், நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினராக, துணைச் செயலாளராக, செயலாளராக, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக பின் மாநிலக் குழு உறுப்பினர் முதல் தேசியக் குழு உறுப்பினர் வரை அரசியல் பணியை தொடர்ந்தவர்.
1989 ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996,1998, 2019 ஆகிய தேர்தலிலும் நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகியுள்ளார்.கமலவதனம் என்பவரைத் திருமணம் செய்து செல்வப்பிரியா, தர்ஷினி என இரண்டு மகள்கள் உள்ளனர். காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1989-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 110 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் எம்.செல்வராஜ்.
தற்போது உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இன்று அதிகாலை 02.40 மணிக்கு இயற்கை எய்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான எம்.செல்வராஜ் காலமானதற்கு பல கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள்