திருச்சிராப்பள்ளி என்ஐடி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி ஆய்வாளர்கள் இணைந்து செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் தெருவிளக்குகளுக்கான ஒருங்கிணைந்த சூரியசக்தி தகடுகளை உருவாக்கியுள்ளனர்
ஆராய்ச்சித் துறையில் ஒரு முக்கிய பங்களிப்பாக திருச்சி என்ஐடி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி ஆய்வாளர்கள் இணைந்து செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் (மின்னேற்றி) தெருவிளக்குகளுக்கான ஒருங்கிணைந்த சூரியசக்தி தகடுகளை உருவாக்கியுள்ளனர்.
செல்பேசிகளுக்கான சூரியசக்தி சார்ஜர் எளிதாக கொண்டு செல்லக் கூடியதாகவும் செலவு குறைந்ததாகவும் கையடக்கமானதாகவும் இருக்கும். அதே போல் தெருவிளக்குகளுக்கான சூரியசக்தி தகடுகள் சமூகத்தில் அன்றாடத் தேவைகளை இலக்காகக் கொண்டவையாகும்.
திருச்சி என்ஐடி-யின் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் சி நாகமணி, மேற்பார்வையின் கீழ் பகுதிநேர பிஎச்டி பட்ட ஆய்வாளரும் திருவனந்தபுரத்தில் உள்ள சிடிஏசி-யின் முதுநிலை இயக்குநருமான திரு வி சந்திரசேகர், காலியம் நைட்ரைடு அடிப்படையிலான உயர்அலை மாற்ற பயன்பாட்டுக்கான மின்னணு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். இவர்களின் ஆய்வு கட்டுரைகள், அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடும் எஸ்சிஐ இதழில் வெளியாகியுள்ளன. மேலும், 3 காப்புரிமைகளையும் 3 பதிப்புரிமைகளையும் பெற்றுள்ளன.
இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை பாராட்டிய திருச்சி என்ஐடி இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா, இவை இந்த நிறுவனத்தின் ஆய்வுத் திறன்களின் விரிவாக்கத்தை ஊக்கப்படுத்துகிறது என்றும் தொழில்துறைக்கும், சமூகத்திற்கும் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கான தேவை உணரப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்றும் கூறினார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி என்ஐடி, நாட்டையும் அதன் மக்களையும் அனைத்து மேம்பாட்டுத் துறைகளிலும் சுதந்திரமாகவும் தற்சார்புடனும் வைப்பதை நோக்கி பாடுபடுகிறது என்றும் அவர் கூறினார்.
கருத்துகள்