தனியாா் நிலங்களைக் கையகப்படுத்தலில் அரசு சார்பில் பின்பற்ற வேண்டிய ஏழு நடைமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டது
தனியாா் நிலங்களைக் கையகப்படுத்தலில் அரசு சார்பில் பின்பற்ற வேண்டிய ஏழு நடைமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டது
தனியாருக்குச் சொந்தமான நிலங்களை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசு கையகப்படுத்துவது சட்டவிரோதமென அறிவித்தது உச்சநீதிமன்றம், அவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்தும்போது அரசு பின்பற்றவேண்டிய ஏழு நடைமுறைகளையும் வியாழக்கிழமை அன்று வெளியிட்டது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பூங்கா கட்டுவதற்காக தனியாருக்குச் சொந்தமான நிலத்தை கொல்கத்தா மாநகராட்சி உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தியது சட்ட விரோதமெனக் கூறி, நிலம் கையகப்படுத்தியதை இரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்ததை எதிா்த்து கொல்கத்தா மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவு சரியானது தான். சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு நபரின் சொத்தையும் பறிக்கக்கூடாது என்று அரசமைப்பு சட்டப் பிரிவு 300 A கூறுகிறது’ எனக் குறிப்பிட்டு, அரசு பின்பற்றவேண்டிய ஏழு நடைமுறைகளை வெளியிட்டது.
‘முன்கூட்டிய தகவல் தெரிந்து கொள்ளும் உரிமை’யின்படி, நிலம் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ள தகவலை சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
‘ஆட்சேபம் தெரிவிக்கும் உரிமை’யின் படி, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான ஆட்சேபத்தை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து கேட்க வேண்டியது அரசின் கடமையாகும்.- ‘நியாயமான முடிவுக்கான உரிமை’யின் படி, நிலம் கையகப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு தொடா்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் தகவல் தெரிவிப்பது அரசின் கடமையாகும்.- ‘பொதுப் பயன்பாட்டுக்கான கையகப்படுத்துதலின்படி, பொதுப் பயன்பாட்டுக்காகத்தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பதை நில உரிமையாளருக்கு விவரிக்க வேண்டியது அரசின் கடமை. ‘நியாயமான இழப்பீடுக்கான உரிமையின் படி, நில உரிமையாளருக்கு உரிய இழப்பீடு அல்லது மறுவாழ்வு அளிப்பது அரசின் கடமையாகும்.
திறமையான, விரைவான நடைமுறைக்கான உரிமையின் படி, நடைமுறைகளுக்கான உரிய கால வரையறைக்குள் நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும். இறுதி முடிவுக்கான உரிமையின் படி, நிலம் கையகப்படுத்துதல் நடைமுறைகளுக்கான இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என ஏழு நடைமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்ததில் ஒரு உரிமையை பின்பற்றவில்லை எனிலும், அதை எதிா்த்து வழக்குத் தொடர முடியும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
கருத்துகள்