விபத்தில் 2 பேர் பலியான சொகுசு கார் விபத்து சிறுவனுக்கு வழங்கிய ஜாமீன் ரத்து.
சொகுசு கார் விபத்தில் 2 பேர் பலியானார்கள். கடும் விமர்சனம் எழுந்த காரணமாக சிறுவனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயதுச் சிறுவன் குடிபோதையில் சொகுசுக் காரை அதிவேகமாக ஓட்டி, பைக் மீது மோதியதில் இரண்டு ஐ.டி நிறுவன ஊழியர்களான அனில் அவதியா மற்றும் அவரது தோழி அஷ்வினி கோஷ்தா ஆகியோர் உயிரிழந்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுவன், குடிபோதையில் கார் ஓட்டியது தெரிய வந்ததால் அவனை கைது செய்தனர். பின்னர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவனுக்கு உடனடியாக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், சாலை விபத்துக் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையும் எழுத உத்தரவிட்டது.
இந்தக் கார் விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் கோர விபத்தில் சிறுவனுக்கு உடனடியாகவும், எளிதாகவும் ஜாமீன் வழங்கப்பட்டது, பலதரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதனால் ஜாமினை சிறார் நீதிமன்றம் ரத்து செய்து சிறார் காண்காணிப்பு மையத்தில் ஜூன் 5 ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், குற்றம் கொடூரமானதால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை வயது வந்தவராகக் கருதுவதற்கும் அனுமதி கோரி காவல்துறை மீண்டும் வாரியத்தை அணுகியதையடுத்து சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய 17 வயதுச் சிறுவன், 25 வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார்.
அந்தச் சிறுவன் ஓட்டி வந்த சொகுசுக் காருக்கான நிரந்தர வாகனப் பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவு கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநிலப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்ட பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்த சொகுசு காரை அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது. விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் சொகுசுக் காரை மோதி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையில்,
17 வயதுச் சிறுவன் மது குடித்து அவரது தந்தையின் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஷே சூப்பர் காரை ஓட்டிச் சென்ற போது அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் சென்று கொண்டிருந்த இருவர் மீது மோதியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில், காரை ஓட்டியதாகக் கூறப்படும் சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்ட சம்பவம் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து மீண்டும் அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை விஷால் அகர்வாலையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தை நடத்தும் பணக்காரர் ஒருவரின் மகனாவார். அதனால், காவல் துறை அவருக்கு சலுகைகள் காட்டி சாதகமாகச் செயல்படுவதாகவும், உதாரணமாக விபத்து ஏற்படுத்தியவர்களின் உடலிலிருந்த, ஆல்காஹிலின் அளவை கணக்கிடுவதற்கான சோதனையை உடனடியாக நடத்தாமல் தாமதப்படுத்ததியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததோடு விபத்து ஏற்படுத்தியவர்களை விட, பலியான அனிஷ் அவாதியா, அஷ்வினி கோஷ்தா ஆகியோர் தொடர்பாக விசாரணையை நடத்தவே அதிகமாக கவனம் செலுத்தியதாகவும் கூறப்பட்ட நிலையில் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ஏர்வாடா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலரிடமும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக முதலில் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், மிகவும் பத்திரமாக கையாளப்பட்டதாக வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி குற்றம் சாட்டியது. அந்தச் சிறுவனுக்கு பீட்சா மற்றும் பர்கர் வாங்கிக் கொடுத்து கவனமாகப் பார்த்துக் கொண்டதோடு, 8 மணி நேரம் கழித்தே மது போதை அளவுப் பரிசோதனை மேற்கொள்ளப்படதாகவும் அக்கட்சி சாடியது. இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்து நடந்தபோது போர்ஷே காரை ஓட்டியது தங்களது ஓட்டுனர் தான் என, சிறுவன் மற்றும் அவரது தந்தையான விஷால் அகர்வால் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து, அவரது மொபைல் போன் மீட்கப்பட்டுள்ளது மற்றும் விபத்து பற்றிய விவரங்களை வெளிக் கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலிடமும் புனே குற்றப்பிரிவு விசாரணை தற்போது நடத்துகிறது . விபத்து நடந்த நாளில் அவரது மகன் மற்றும் பேரனிடம், அவர் மேற்கொண்ட உரையாடல்களைப் பற்றி அறியும் நோக்கிலும் விசாரணை நடத்துகின்றனர். இதனிடையே, சுரேந்திர அகர்வாலிற்கு பிரபல தாதா, சோட்டா ராஜனுடன் தொடர்புடையவர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
கருத்துகள்