ஆந்திராவில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது
ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக அந்த மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் பங்கேற்ற கூட்டம் தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பங்கேற்று, ஆந்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்த தனது அதிருப்தியைத் தெரிவித்தது. இதுபோன்ற வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம், ஆந்திர தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்கு எதிராக விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆந்திர தலைமைச் செயலாளரும் மற்றும் காவல்துறைத் தலைவரும் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தனர். இதையடுத்து மாநில அரசின் கீழ்க்காணும் முன்மொழிவுகளுக்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது:
1) பல்நாடு மாவட்ட ஆட்சியரைப் பணியிட மாற்றம் செய்தல் மற்றும் துறை ரீதியான விசாரணை நடத்துதல்.
2) பால்நாடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனந்தபுரமு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்வது மற்றும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்வது.
3) திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளரைப் பணியிட மாற்றம் செய்து துறை ரீதியான விசாரணை நடத்துவது.
4) மூன்று மாவட்டங்களில் (பல்நாடு, அனந்தபுரமு மற்றும் திருப்பதி) 12 சார்நிலை காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து துறை ரீதியான விசாரணையைத் தொடங்குவது.
5) ஒவ்வொரு வழக்கிலும் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பித்தல்.
6) தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வன்முறையை கட்டுப்படுத்த 25 மத்திய ஆயுதப் படை கம்பெனிகளை 15 நாட்களுக்கு வைத்திருப்பது.
இதையடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வன்முறையை கட்டுப்படுத்த ஆந்திராவில் உள்ள மத்திய ஆயுதப் படைக் கம்பெனிகளை 15 நாட்களுக்கு வைத்திருக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைக் கட்டுப்படுத்த மாநில நிர்வாகம் தவறியதற்கான காரணங்களை விளக்குமாறு ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் தேர்தல் ஆணையம் புதுதில்லிக்கு வரவழைத்தது. அனந்தபுரமு, பல்நாடு, திருப்பதி மாவட்டங்களில் வாக்குப்பதிவு நாளன்றும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய நாளிலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தாக்குதல், சொத்துகளை சேதப்படுத்துதல், வாகனங்களை சேதப்படுத்துதல், கல்வீச்சு போன்ற சம்பவங்கள் தேர்தலுக்கு முன்பும் நடந்துள்ளன. இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை அன்னமாயா, சித்தூர் மற்றும் பல்நாடு மாவட்டங்களில் நடந்துள்ளன. குண்டூர், அனந்தபூர், நந்தியால் போன்ற மாவட்டங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.
கருத்துகள்