சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் அசாம் அரசுடன் இணைந்து, 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற தலைப்பிலான மாநாட்டை நாளைமுதல் இரண்டு நாட்களுக்கு குவஹாத்தியில் நடத்தவுள்ளது:
மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் மாநாட்டில் பங்கேற்கிறார்
கடந்த சில ஆண்டுகளில், பழமையான காலனித்துவ சட்டங்களை ரத்து செய்து, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சட்டங்களை இயற்ற மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில், நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பை மாற்றியமைக்க மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய நீதித்துறை சட்டம் - 2023, இந்திய சிவில் பாதுகாப்பு சட்டம் - 2023 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் -2023 ஆகியவை அந்தச் சட்டங்களாகும். முந்தைய குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம்- 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம்- 1973, இந்திய சாட்சியச் சட்டம் - 1872 ஆகியவற்றை இந்தப் புதிய சட்டங்கள் மாற்றி அமைக்கும். ஏற்கெனவே அறிவித்தபடி, இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.
இந்தப் புதிய சட்டங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், அசாம் மாநில அரசுடன் இணைந்து குவஹாத்தியில் நாளையும் நாளை மறுநாளும் (2024 மே 18 மற்றும் 19), 'குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதி திரு ரிஷிகேஷ் ராய், குவஹாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு விஜய் பிஷ்னோய், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பிஸ்வநாத் சோமதர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மெக்வால், இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் ரீட்டா வஷிஸ்த் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்களை வெளிக்கொணர்வதும், தொழில்நுட்ப மற்றும் கேள்வி பதில் அமர்வுகள் மூலம் கலந்துரையாடல்களை நடத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும். பல்வேறு நீதிமன்றங்களின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சட்ட அமலாக்க முகமைகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்க தொடர் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தொடரின் முதல் மாநாடு 2024 ஏப்ரல் 20 அன்று புதுதில்லியில் நடைபெற்றது
கருத்துகள்