நாட்டின் பாதுகாப்பு பலம் அதன் ராணுவ வலிமையில் மட்டுமல்ல, கலாச்சார பாரம்பரியத்தை அதிகாரத்தின் ஆதாரமாக பயன்படுத்தும் திறனிலும் உள்ளது: பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட்
'இந்திய உத்திசார்ந்த கலாச்சாரத்தின் வரலாற்று வடிவங்கள்' குறித்த கருத்தரங்குடன் கூடிய கண்காட்சி புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் 2024 மே 21 அன்று நடைபெற்றது. பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் 'இந்திய ராணுவ அமைப்புகளின் உருவாக்கம், போர் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகள், பழங்காலம் முதல் சுதந்திரம் வரை' என்ற தலைப்பில் கண்காட்சி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு இணையமைச்சர், நாட்டின் பழங்கால நூல்கள் மற்றும் வாய்வழி மரபுகளை ஆராய்ந்து அதன் உத்திசார்ந்த கலாச்சாரம் குறித்த விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்ட 'திட்டப் பரிணாம' முன்முயற்சிக்காக இந்திய ராணுவ ஒருங்கிணைப்பு நிறுவனத்தைப் பாராட்டினார். "புவிசார் அரசியல் தளம் எப்போதும் உருவாகி வருவதால் நமது ஆயுதப்படைகள் தங்கள் அணுகுமுறையில் புதுமைகளுடன் இருக்க வேண்டியது அவசியம்” என்று அவர் தெரிவித்தார். நமது பழங்கால நூல்கள் மற்றும் மரபுகளை ஆராய்வதன் மூலம், 'திட்டப் பரிணாமம்', உத்திபூர்வ கலாச்சாரத்தைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவது மட்டுமின்றி, வழக்கத்திற்கு மாறான போர் உத்திகள், ராஜீய நடைமுறைகள் மற்றும் போர் நெறிமுறைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதாக அவர் கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு வலிமையை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு அஜய் பட், நாட்டின் பாதுகாப்பு பலம் அதன் ராணுவ வலிமையில் மட்டுமல்ல, கலாச்சார பாரம்பரியத்தை அதிகாரத்தின் ஆதாரமாக பயன்படுத்தும் திறனிலும் உள்ளது என்று கூறினார்.
கருத்துகள்