பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா தான்சானியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்
பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா தான்சானியா ஐக்கிய குடியரசுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். 2024 மே 13-15 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தின் நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைப் பற்றி விவாதிப்பதும் ஆகும்.
அவரது பயணத்தின் போது, தான்சானியா மக்கள் பாதுகாப்புப் படையின் தலைவர் ஜெனரல் ஜேக்கப் ஜான் முகுண்டா மற்றும் பாதுகாப்பு புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.என்.மெக்ரெமி உட்பட தான்சானியாவின் மூத்த ராணுவத் தலைவர்களுடன் ராணா கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது. தான்சானியா தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு செல்லும் அவர், தான்சானியா பாதுகாப்புப் படைத் தலைவர்களுடன் இந்தியாவின் பாதுகாப்பு முன்னோக்கு குறித்து விவாதிப்பார். இந்தச் சந்திப்புகள் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ராணா இந்திய உயர் தூதரகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவையும் திறந்து வைப்பார். ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நல்லெண்ண அடையாளமாக, அவர் தான்சானியா படைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை பரிசளிப்பார். கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் நூலகத்தை திறந்து வைப்பார். மத்திய அரசின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்படும் உடற்பயிற்சி கூடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.
தான்சானியாவுடன் நெருக்கமான, அன்பான மற்றும் நட்புறவை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. வலுவான திறன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் வலுப்பெற்றுள்ள நிலையில், இந்திய ராணுவ தூதுக்குழுவின் வருகை தான்சானியாவுடனான உயர்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்