ரூபாய்.10,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் கண்ணமங்கலம் அருகில் காட்டுக்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 50). அமிர்தி பகுதியில் கேன்டீன் நடத்துகிறார். ஊராட்சிப் பகுதிகளில் அரசு கட்டிடப் பணிகள் சம்பந்தமாக சால்வன்சி மூலம் ஒப்பந்த டெண்டர் எடுத்து பணி செய்யும் ஒப்பந்ததாராகவும் உள்ளார். இந்த நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஒப்பந்த டெண்டர் ரூபாய்.20 லட்சத்தில் எடுத்துள்ளார்.
இதற்கு அரசு சொத்து மதிப்பு சால்வன்சி சான்றிதழ் கோரி ஆரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.சான்றிதழ் வழங்குவதற்காக தலைமையிடத்துத் துணை வட்டாட்சியருக்கு ரூபாய். பத்தாயிரமும், வருவாய் ஆய்வாளருக்கு ரூபாய்.பத்தாயிரமும் , கிராம நிர்வாக அலுவலருக்கு ரூபிய்.5 ஆயிரத்தையும் சீனிவாசன் இலஞ்சமாகக் கொடுத்துள்ளார். இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் சான்றிதழுக்குப் பரிந்துரை செய்து, வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதையடுத்து சீனிவாசன் நேற்று முன்தினம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று சான்றிதழ் குறித்து கேட்ட போது வட்டாட்சியர் மஞ்சுளா தனக்கு ரூபாய்.1 லட்சத்துக்கு ரூபாய் ஆயிரம் வீதம், ரூபாய்.20 லட்சத்திற்கு ரூபாய்.20 ஆயிரம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். பின்னர் கொஞ்சம் லஞ்சத்தைக் குறைத்து, ரூபாய்.பத்தாயிரம் கொடுத்தால் தான் சான்று வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் லஞ்சம் வாங்கிய பிறகு கூடுதல் தொகை கேட்டதால் கொடுக்க விரும்பாத காரணமாக அது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சீனிவாசன் புகார் செய்தார்.பின் அவர்களிடம் தான் கொண்டு வந்த பத்தாயிரம் பணத்தில் அரசு சாட்சி முன்பு பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய். பத்தாயிரத்தை நேற்று சீனிவாசனிடம் கொடுத்து அரசு தரப்பில் சாட்சியுடன் அனுப்பினர்.
சீனிவாசனிடமிருந்து இரவுக் காவலர் பாபு ரூபாய்.பத்தாயிரம் பணத்தை வாங்கி வட்டாட்சியர் மஞ்சுளாவிடம் கொடுக்க முயன்ற போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டாட்சியரையும், இரவுக் காவலாளியையும் லஞ்சம் பெற்ற கையுடன் கைது செய்தனர். அதையடுத்து பணம் வாங்கிய தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வட்டாட்சியர் மற்றும் இரவுக் காவலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள்