ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடிக்கு திரு இம்மானுவேல் மேக்ரோன் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், அதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
'ஹொரைசன் 2047' செயல்திட்டம் மற்றும் இந்தோ-பசிபிக் செயல்திட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் தேசிய அருங்காட்சியகம் தொடர்பான கூட்டு செயல்பாடு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். 2025-ம் ஆண்டில் பிரான்சில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் ஐநா பெருங்கடல் மாநாடு ஆகியவை தொடர்பாக இருநாடுகளும் இணைந்து பணியாற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இரு தலைவர்களும், முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். நிலையான மற்றும் வளமான உலக அமைப்பிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வலுவான மற்றும் நம்பகமான உத்திசார் கூட்டு செயல்பாடு முக்கியமானது என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருதரப்பும் நெருக்கமாக பணியாற்றுவது எனவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
பாரீஸில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது தொடர்பாக அதிபர் மெக்ரோனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
கருத்துகள்