பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை படத்துடன் வெட்டப்பட்ட ஆடு குறித்து கட்சியின் நிர்வாகி சார்பில் கண்டனம்
அண்ணாமலை படத்துடன் வெட்டப்பட்ட ஆடு குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி நடுரோட்டில் வெட்டிய காணொளிகாட்சி நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலையின் படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி, அதனை சாலையின் குறுக்காகப் படுக்கவைத்து வெட்டிய நிகழ்வு. அந்த காணொளிக்காட்சி எங்கு எடுக்கப்பட்டது. அவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. "திமுகவினருக்கு அவ்வளவு கோபமென்றால் என் மேல் கை வையுங்கள். அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார் மேலும் "நான் கோவையில் தான் இருக்கப் போகிறேன். கரூரில் தான் விவசாயம் பார்க்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். அது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியான நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "நடு ரோட்டில் ஓர் ஆட்டை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை மீது தமிழக அரசியல் கட்சிகள் கொண்டுள்ள கொலை வெறியை இது வெளிப்படுத்துகிறது. ஊழலை, லஞ்சத்தை, முறைகேடுகளை தட்டிக்கேட்டால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதைச் சொல்லாமல் உணர்த்துகிறது.
வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட திமுகவினர் ஒரு ஆட்டை பிடித்து கொண்டிருந்த காட்சி திமுகவினர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து அரசியல் செய்கிறார்கள் என்பதை தெளிவாக்குகிறது. சிறுவர்களை தூண்டி விட்டு அவர்களின் மனங்களில் வன்முறையை, வன்மத்தை புகுத்தியது கொடும் குற்றம். அண்ணாமலை மீது உள்ள பயம், தமிழகத்தில் திமுகவினர் அரங்கேற்ற துடிக்கும் வெறியாட்டத்தை உணர்த்துகிறது. தமிழக காவல் துறை மற்றும் முதல்வர் ஸ்டாலின், இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட வேண்டும். அண்ணாமலையின் பாதுகாப்புக்கு தமிழக காவல் துறை முழு பொறுப்பேற்க வேண்டும்" என பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் காணொளி காட்சியில், சின்னச் சின்ன குழந்தைகள் அண்ணாமலைக்கு எதிராகக் கோஷம் எழுப்புவதும் பதிவாகியிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
கருத்துகள்