புதிய சிறிய பயன்பாட்டு டிராக்டர் – குறு மற்றும் சிறு விவசாயிகளின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும்
இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகள் குறு மற்றும் சிறு விவசாயிகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் விவசாயத்துக்கு காளை மாடுகளையே நம்பியுள்ளனர். இத்திட்டத்தில் செயல்பாட்டுச் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் குறைந்த வருவாய் ஆகியவை சவாலாக உள்ளன. காளை மாடுகளால் இயக்கப்படும் கலப்பைகளுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் உழவு எந்திரங்கள் (பவர் டில்லர்கள்) பயன்படுத்தப்பட்டாலும், அவற்றை இயக்குவதற்கு சிக்கல் ஏற்படுகிறது. மறுபுறம், டிராக்டர்கள் பெரும்பாலான சிறு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாதவைகளாக உள்ளன.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள, சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-சி.எம்.இ.ஆர்.ஐ) குறு மற்றும் சிறு விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறைந்த குதிரைத்திறன் கொண்ட கச்சிதமான, விலைகுறைந்த மற்றும் எளிதில் கையாளக்கூடிய டிராக்டரை உருவாக்கியுள்ளது.
குறு மற்றும் சிறு விவசாயிகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கச்சிதமான, குறைந்த செலவிலான, எளிதில் கையாளக்கூடிய டிராக்டர் வேளாண் செலவைக் குறைக்கும் அதே நேரத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவும். விவசாயிகளுக்கு வழங்குவதற்காக டிராக்டர்களை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி ஆலையை அமைக்க ஒரு எம்.எஸ்.எம்.இ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள பல சுய உதவிக் குழுக்களிடையே இந்த தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்திற்காக புதிய சுய உதவிக் குழுக்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சி.எஸ்.ஐ.ஆர்- சி.எம்.இ.ஆர்.ஐ பெரிய அளவிலான உற்பத்திக்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது குறித்தும் விவாதித்து வருகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் நன்மைகளை அடைய முடியும்.
டிராக்டர் 9 ஹெச்பி டீசல் எஞ்சினுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், உருவாக்கப்பட்டுள்ளது. டிராக்டரின் மொத்த எடை சுமார் 450 கிலோ ஆகும், முன் மற்றும் பின்புற சக்கர அளவுகள் முறையே 4.5-10 மற்றும் 6-16 ஆகும்.
மாட்டு வண்டிக்குத் தேவைப்படும் பல நாட்களுடன் ஒப்பிடும்போது சில மணி நேரங்களில் விவசாயத்தை முடிக்கவும், விவசாயிகளின் மூலதனம் மற்றும் பராமரிப்பு செலவைக் குறைக்கவும் இது உதவும்.
எனவே, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு காளை மாடுகளால் இயக்கப்படும் கலப்பைக்கு மாற்றாக குறைந்த விலையிலான இந்த சிறிய டிராக்டர் செயல்படும்.
கருத்துகள்