பாகுபாடான அணுகுமுறை இல்லாமல் கருத்துகளை எப்போதும் கவனிக்க வேண்டும் என்று குடிமைப் பணியாளர்களிடம் குடியரசு துணைத்தலைவர் கூறினார்
குடிமைப் பணியாளர்கள் பாகுபாடான அணுகுமுறை இல்லாமல் கருத்துகளை எப்போதும் கவனிக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். 2022 தொகுப்பைச் சேர்ந்த இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகளிடையே (உதவி செயலாளர்கள்) இன்று (03.06.2024) உரையாற்றிய அவர், குடிமைப்பணியாளர்கள் அரசியல் சார்புடன் இருக்கக் கூடாது என்றார்.
இந்திய அதிகாரிகளின் திறமையை அங்கீகரித்த குடியரசு துணைத்தலைவர், அதிகாரிகள் எப்போதும் தேசிய, கூட்டமைப்பு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தேசமே முதன்மையானது, சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இளம் அதிகாரிகள், கற்றலை ஒரு போதும் கைவிடக் கூடாது என்றும் தங்களின் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். புதிய சகாப்தத்தில் ஊழல் இல்லாமல் அதிகார அமைப்புகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தற்போது வெளிப்படைத்தன்மையும் பதிலளிக்கும் பொறுப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன் எப்போதும் இல்லாத வகையில் குடிமைப் பணி ஏழை, எளியோர், விளிம்பு நிலையினர் போன்ற சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக உள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
கருத்துகள்