பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உக்ரைன் அதிபர் வாழ்த்து பதவி ஏற்பில் உலகத் தலைவர்கள் வருகை
பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உக்ரைன் அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடியை உக்ரைன் அதிபர் மேதகு திரு விலாடிமிர் ஜெலென்ஸ்கி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அவருக்கு நன்றி தெரிவித்த பிரதமர், உக்ரைனுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டிருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
உக்ரைனில் நடைபெற்று வரும் மோதல் குறித்துப் பேசிய பிரதமர், மக்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் அணுகுமுறையை எடுத்துரைத்ததுடன், பேச்சுவார்த்தை மற்றும் ராஜீயமுறையில் மோதலுக்கு விரைவான, அமைதியான மற்றும் நீடித்த தீர்வுக்குத் தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக உலகத் தலைவர்களின் வருகை
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் திரு டாக்டர் முகமது முய்ஸு, செஷல்ஸ் நாட்டின் துணை அதிபர் திரு. அகமது அஃபிப்; வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹால் 'பிரசண்டா', பூடான் பிரதமர் திரு. ஷெரிங் டோப்கே ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்பதோடு, தலைவர்கள் அன்று மாலை குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உலகத் தலைவர்களின் வருகை இந்தியா தனது 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' எனும் கொள்கை மற்றும் 'சாகர்' தொலைநோக்கு பார்வைக்கு அளித்த உயர்ந்த முன்னுரிமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கருத்துகள்