திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் மாதந்தோறும்
உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெறும் போது கோவில் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஈடுபடுத்துவது வழக்கமாகும். அந்த வகையில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்த போது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள்,
பேராசிரியர்கள், மாணவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த எண்ணிக்கையின் போது 778 கிராம் தங்கம், 12.039 கிலோ கிராம் வெள்ளி, 1.66 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்தாகப் பதிவு செய்யப்பட்டது. அப்போது பணி செய்த ஒரு பெண் உண்டியல் பணத்தை திருடுவது சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில். அது குறித்து கோவில் நிர்வாகத்தினர் பழநி அடிவாரம் காவல்துறையினரிடம் புகார் அளித்து நடத்திய விசாரணையில் அருள்மிகு பழநியாண்டவர் கல்லூரி உதவிப் பேராசிரியர் மைதிலி (வயது 37)
உண்டியல் காணிக்கை பணத்தில் 82 ஆயிரம் ரூபாயைத் பல கட்டமாக திருடியது தெரிய வந்ததையடுத்து அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்து, உதவி பேராசிரியரைக் கைது செய்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறும் போது. ``கடந்த ஆண்டு நடந்து முடிந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோவில் விழாக்கள் அடுத்தடுத்த நடந்து வருகின்றன. அதனால் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிமாக வருகிறது, உண்டியல் காணிக்கையும் அதிகமாகவே கிடைப்பதால் மாதந்தோறும் உண்டியல் எண்ணிக்கைப் பணிகள் நடக்கிறது. பணம் எண்ணும் பணி நடக்கும் பகுதியில் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளோம். இறை பற்றுள்ளவர்களைக் கொண்டு தான் எண்ணிக்கை நடத்துகிறோம்.
ஆனால் அதையும் மீறி கோவில் உண்டியல் பணத்தைத் திருடியது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன் கோவில் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் இதுபோன்று திருடி மாட்டிய நிகழ்வு நடத்திருக்கிறது. இம்முறை கல்லூரிப் பேராசிரியை ஒருவரே திருட்டில் சிக்கியிருப்பது வருந்தத்தக்கதாக உள்ளது” என்றனர், கடவுள் பக்தி இல்லாமல் இப்படிச் செய்து சிக்கிய நிலையில் சிறைக்குச் சென்றார்.
கருத்துகள்