46-வது உலக பாரம்பரிய குழுக் கூட்டத்தையொட்டி இந்திய பொதுக் கலைத் திட்டத்தை கலாசார அமைச்சகம் தொடங்கியுள்ளது
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், 2024 ஜூலை 21 முதல் 31 வரை புதுதில்லியில் நடைபெறும் உலக பாரம்பரியக் குழு கூட்டத்தின் 46-வது அமர்வுக்காக, பாரி (Project PARI -Public Art of India) எனப்படும் இந்திய பொதுக் கலைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தில்லி நகருக்கு பிரதிநிதிகளை வரவேற்கும் வகையில், பல்வேறு இந்திய மரபுகளைப் பிரபலப்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட ஓவியக் கலைஞர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து தில்லியின் பல பகுதிகளை அழகுபடுத்துகின்றனர். தேசிய நவீன கலை மன்றத்துடன் இணைந்து லலித் கலா அகாடமி இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது.
இந்த கலைஞர்கள் பொது இடங்களை அழகுபடுத்துவதற்காக தில்லியில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்த அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ்
பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் சிற்பங்கள், சுவரோவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பெண் கலைஞர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தேசிய தலைநகரான தில்லியின் வளமான வரலாற்று பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்கும் அதே வேளையில், தில்லியின் அழகியல் மற்றும் கலாச்சார கண்ணோட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதே பாரி திட்டத்தின் நோக்கமாகும்.
கருத்துகள்