தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்து ரகசியப் பயிற்சி அளித்தது தொடர்பாக இருவர் கைது
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்து ரகசியப் பயிற்சி அளித்தது தொடர்பாக, ஐந்து மாவட்டங்களில், பத்து இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும், 'கிலாபத்' என்ற, இஸ்லாமிய இயக்க ஆட்சியைக் கொண்டு வர, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்பு, 1953 ஆம் ஆண்டில் ஜோர்டான் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரகசியமாகச் செயல்படும் இந்த அமைப்பினர், முஸ்லீம்களில் உள்ள இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் எஞ்சினியர் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், அவரது இளைய சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் மே மாதமே கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த, சென்னையைச் சேர்ந்த முகமது மவுரிஸ் (வயது 36), காதர் நவாஸ் ஷெரிப் (வயது 35), அகமது அலி உமரி (வயது 46), என்ற மேலும் மூவரும் கைதாகினர்.
இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு, பயிற்சி அளித்தது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்தி வந்த, என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை என, ஐந்து மாவட்டங்களில், பத்து இடங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலை 5:30 முதல் மாலை 7:30 மணி வரை சோதனையும் நடத்தினர்.
சென்னையில் பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, முடிச்சூர் மின்வாரியக் காலனியில் வசித்து வரும், கபீர் அகமது (வயது 40), வீட்டில், என்.ஐ.ஏ. டி.எஸ்.பி., குமரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூரில் குழந்தையம்மாள் நகரைச் சேர்ந்த தனியார் போட்டோகிராபரான அகமது (வயது 36) வீட்டில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் சோதனை நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின முன்பாக முஸ்லீம்கள் குவிந்தனர். எனினும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை பகுதியில் ஷேக் அலாவுதீன் (வயது 68), வீட்டிலும்; சாலியமங்கலத்தில் பட்டதாரியான அப்துல் ரஹ்மான் (வயது 26); மாவு மில் நடத்தி வரும் முஜிபுர் ரஹ்மான் (வயது 45), உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றது.
ஷேக் அலாவுதீன், அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் வீடுகளில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. சிம்கார்டு, மொபைல் போன், பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் என, டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி சுப்பிரமணியபுரத்தில், அவர்களது உறவினர் ஜமால் முகமதுவின் வீட்டில் பதுங்கி இருந்த, அப்துல் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கான் என்ற அப்துல்காதர் (வயது 40). அப்பகுதியில், இரண்டாண்டுகளாக பண்ணை வீடு கட்டி வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது, இரகசியமாகப் பயிற்சியளித்ததற்கு ஆதரமான,
துண்டுப் பிரசுரங்கள், மொபைல் போன், ஹார்டு டிஸ்க் போன்றவற்றையும் கைப்பற்றினர்.
ஈரோடு எஸ்.கே.சி.சாலை பகுதியில் வசிப்பவர், முகமது ஈசாக் (வயது45); டூ - வீலர் மெக்கானிக். மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். கேரளாவிலிருந்து வந்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஈசாக் வீட்டில் சோதனை செய்தனர். முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், சென்னையிலுள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என அவருக்கு, 'சம்மன்' வழங்கியுள்ளனர்.
ஈரோடு செட்டிபாளையம் அசோக் நகரைச் சேர்ந்தவர் சர்புதீன் (வயது 40); போட்டோகிராபர். அண்ணன், அக்கா, அம்மாவுடன் வசிக்கிறார். கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஐந்து பேர் சோதனையில் ஈடுபட்டனர். பயங்கவாதச் செயலுக்கான புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென, அவருக்கும், 'சம்மன்' வழங்கப்பட்டுள்ளது.
சோதனை குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு
விபரம் வருமாறு:- 'தடை செய்யப்பட்ட, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தது தொடர்பாக, சென்னை, தஞ்சாவூர் உட்பட ஐந்து மாவட்டங்களில், பத்து இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப், சிம்கார்டுகள், மெமரி கார்டுகள், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கம் தொடர்பான சித்தாந்த நுால்கள், கிலாப் என்ற இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்று, உறுதிமொழி எடுத்தற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. நிதியுதவிகளும் பெற்றுள்ளனர்.
இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிறுவ, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், நீதித்துறை, சட்டம் உள்ளிட்டவைகள் தடையாக உள்ளன. இதை தகர்த்து எறிய வேண்டுமென, இரகசிய வகுப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன. ஹிஸ்ப் உத் தஹ்ரீர் நிறுவனர், தாகி அல் தின் அல் அல் நபானி எழுதிய, இஸ்லாமிய ஆட்சி குறித்த நுால்களையும் அச்சிட்டு வினியோகம் செய்துள்ளனர்.
பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்ப்பது, அவர்களுக்கு ரகசிய வகுப்பில் பயிற்சி அளிப்பது என தீவிரமாக செயல்பட்ட, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்'. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்