சணல் கைவினை அடிப்படையிலான வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையவழிக் கருத்தரங்கு
வேளாண் அல்லாத துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் சணல் கைவினை குறித்த இணையவழிக் கருத்தரங்கை நேற்று நடத்தியது. சணல் கைவினைத் தொழிலின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து அதன் நிலை, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி விவாதிப்பதை இந்தக் கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டிருந்தது.
கிராமப்புற வாழ்வாதாரங்களின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் தனது உரையில், சணல் வாழ்வாதாரத்திற்கான 'தங்க இழை' மற்றும் சுற்றுச்சூழலுக்கான 'பசுமை இழை' என்பதை நிரூபிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று கூறினார். சணல் கைவினைக்கு கோல்டன் ஃபைபர் மற்றும் கிரீன் ஃபைபர் ஆகிய இரண்டும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில், அதன் உற்பத்தி செலவைக் குறைப்பதற்கான வழிகளில் கவனம் செலுத்தவும், சந்தைப்படுத்தல் முயற்சிகளை அதிகரிக்கவும் நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். வருமானத்தை அதிகரிக்கும் திறனுடன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி லட்சாதிபதி சகோதரிகளை நடத்துவதற்கான முயற்சிகளுக்கு இது வலு சேர்க்கும்.
பங்கேற்பாளர்களை வரவேற்றுப் பேசிய அமைச்சகத்தின் இயக்குநர் திருமதி ராஜேஸ்வரி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சந்தை உத்திகள் மற்றும் துறையில் உள்ள பெண் கைவினைஞர்களின் அனுபவங்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ள வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்தக் கருத்தரங்கு ஒரு தளத்தை வழங்கும் என்று கூறினார்.
இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் தேசிய சணல் வாரியத்தின் இணை இயக்குநர் திரு கிஷன் சிங் குக்தியால், சணல் பொருட்களின், பன்முகத்தன்மையை உறுதி செய்வதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் சணல் கைவினையை ஊக்குவிப்பதற்கான அரசின் முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.
இந்திய சணல் தொழில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் மிகவும் பழமையானதாகும். பீகார், மேற்கு வங்கம், அசாம், ஒரிசா, உத்தரபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பணப்பயிராக வளர்க்கப்படும் தாவரத்தின் தண்டிலிருந்து சணல் நார் பிரித்தெடுக்கப்படுகிறது. உண்மையில், சணல் ஆலைகள் இங்கு ஒரு முக்கியமான தொழிலாக அமைகின்றன, மேலும் இந்தத் தொழில் இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
கருத்துகள்