விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி: மத்திய பெட்ரோலிய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
புதுதில்லி அசோகா ஹோட்டலில் இன்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சம்பிரதாய வழியனுப்பு விழாவில் மத்திய பெட்ரோலிய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, ஒலிம்பிக் என்பது சாதனைகளின் உச்சம் என்றார்.
அண்மைக் காலத்தில் நமது வீரர்களின் திறன் அதிகரித்துள்ளது என்றும் சமீபத்திய வெற்றிகள் காரணமாக எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
நமது விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஆதரவை வழங்குவதில் எண்ணெய், எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் பெரிய பங்காற்றுகின்றன என்று அவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று அவர் கூறினார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இந்தியன் ஆயில், பிபிசிஎல், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் ஆதரவு மற்றும் உதவிகளை வழங்குவதை அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா விளையாட்டில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை இந்தக் குழு முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்று நான் நம்புவதாகக் கூறினார். 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களிலிருந்து 2020 டோக்கியோ ஒலம்பிக்கில் ஏழு பதக்கங்களாக உயர்ந்ததை அவர் குறிப்பிட்டார். இந்த முறை இந்திய விளையாட்டு வீரர்களின் பதக்க எண்ணிக்கை மேலும் உயரும் என்று திரு மன்சுக் மாண்டவியா நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள்