நாடாளுமன்ற இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்தது
18-வது மக்களவைக்கான பொதுத்தேர்தலுக்குப் பின் மக்களவையின் முதலாவது அமர்வும், மாநிலங்களவையின் 264-வது அமர்வும் முறையே ஜூன் 24, 27 ஆகிய தேதிகளில் தொடங்கின. மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை இன்று (03.07.2024) மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தின் இந்த அமர்வு விவரங்களை தெரிவித்தார். 18-வது மக்களவையின் உறுப்பினர்களாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு/ உறுதி மொழி ஏற்புக்காக மக்களவையில் முதல் இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டன. இந்த அமர்வில், 542 உறுப்பினர்களில் 539 பேர் பதவியும் உறுதிமொழியும் ஏற்றனர்.
இந்தப் பதவியேற்புக்காக மக்களவையின் இடைக்காலத் தலைவராக திரு பர்துஹரி மெஹ்தாவைக் குடியரசுத் தலைவர் நியமித்தார். மக்களவைத் தலைவருக்கான தேர்தல் 2024, ஜூன் 26 அன்று நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் திரு ஓம் பிர்லா, மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில், தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களவைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
2024, ஜூன் 27 அன்று குடியரசுத்தலைவர் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். அரசின் கடந்த கால சாதனைகளையும், தேச வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
2024, ஜூன் 27 அன்று பிரதமர் தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை மாநிலங்களவைக்கு அறிமுகம் செய்தார்.
குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு அவைகளிலும் 2024, ஜூன் 28 அன்று தொடங்கியது.
மக்களவையில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்த விவாதத்தை 2024, ஜூலை 1 அன்றுதான் தொடங்க முடிந்தது. மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனுராக் தாக்கூர், விவாதத்தை முன்மொழிந்தும், திருமதி பன்சூரி சுவராஜ் வழிமொழிந்தும் பேசினார்கள். மொத்தம் 68 உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். 50-க்கும் அதிகமான உறுப்பினர்கள் தங்களின் உரைகளை அவையில் தாக்கல் செய்தனர். 18 மணி நேரத்திற்கும் கூடுதலான விவாதத்திற்கு பின், 2024, ஜூலை 2 அன்று பிரதமர் பதிலளித்து உரையாற்றினார்.
மாநிலங்களவையில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை 2024, ஜூன் 28 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுதன்ஷு திரிவேதி முன்மொழிந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கவிதா பட்டிதார் வழிமொழிந்தும் பேசினார்கள். விவாதத்தில் 76 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 21 மணி நேரத்திற்கும் அதிகமான விவாதத்திற்கு பின், பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, ஜூலை 3 அன்று பதிலளித்து உரையாற்றினார்.
கருத்துகள்