நீட் மறு தேர்வே தீர்வென்கிறது உச்சநீதிமன்றம்.
நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் ஏன் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடுகிறார்? என்ற வினா எழுகிறது, தேசியத் தேர்வு முகமையானது தனிப்பட்ட அமைப்பு அதற்கும் மத்திய அரசுக்கும் என்ன தொடர்பென மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் வினா எழுப்பியுள்ளார். நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பார்வதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு விசாரிக்கிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். மேலும் 67 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றது எப்படி எனவும், தேர்வு எழுதிய 20 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
மேலும் வினாத்தாள் எப்போது அச்சடிக்கப்படுகிறது, எப்படி விநியோகிக்கப்படுகிறது? இப்படி பல கேள்விகளை முன்வைத்த நீதிபதி சந்திரசூட். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? முதல் தகவல் அறிக்கை எத்தனை பேர் மீது பதியப்பட்டுள்ளது? உள்ளிட்ட விவரங்களை தேசியத் தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
வழக்கு மீண்டும் 11 ஆம் தேதி நாளை விசாரணைக்கு வருகிற நிலையில் இந்தத் தேர்வை நடத்துவதே மத்திய அரசு இல்லை. தேசியத் தேர்வு முகமை என்பது தனிப்பட்ட அமைப்பு. அதன் மீதான முறைகேடுகளைத்தான் நீதி மன்றம் விசாரிக்கிறது. அப்படியான நிலையில், இந்த வழக்கில் ஏன் மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் பங்கேற்று வாதிடுகிறார் என்ற கேள்வியை எழுப்பும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பல்வேறு சந்தேகங்களை முன்வைக்கிறார்.,
"இப்போதுதான் 'நீட்' தேர்வுத் தாள் கசிவு குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இன்னும் பல நாட்கள் விசாரணை தொடரும் என்பது தான் உண்மை. இப்போது ஏதோ முதல் முறையாக இந்தத் தேர்வுத் தாள் கசிவு நடைபெறவில்லை. பலமுறை சிறிய அளவில் நடந்துள்ளது. மிகப்பெரிய அளவில் இப்போது தான் நடந்துள்ளதால், இந்தளவுக்கு இந்த விவகாரம் நீதிமன்றம் வரை போயுள்ளது. இந்திய அளவில் நடைபெறும் எந்த வினாத் தாள் கசிவு சர்ச்சைகளில் ஒன்றில் கூட, தமிழ்நாடு பெயர் அடிபட்டதில்லை. தமிழ்நாடு இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடுவதில்லை. வடமாநிலங்களில்தான் இது தொடர்ந்து நடக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதி மறுதேர்வு ஏன் வைக்கக் கூடாதென்று கேட்டுள்ளார்.
அப்படி என்றால் 28 லட்சம் பேரும் தேர்வு எழுத வேண்டும். அது அனைவரையுமே பாதிக்கும் என விளக்கம் தந்துள்ளார்கள். அப்படியானால், யாரெல்லாம் வினாத் தாள் கசிவு விவகாரத்தில் பலனடைந்துள்ளனர் என்பதை அடையாளம் கண்டுவிட்டீர்களா?, பயனாளிகள் 100 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனரா? எனவும் நீதிபதி கேட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் எப்படி நீட் தேர்வு நடத்தப்பட்டது? வெளிநாடுகளுக்கு எப்படி வினாத் தாள் விநியோகம் செய்யப்பட்டது? என்றெல்லாம் நீதிபதி கேட்டுள்ளார்.
அதன்பின் தான் வெளிநாடுகளிலும் நீட் தேர்வு மையங்கள் உள்ளதென்பதே நமக்குத் தெரிகிறது. அப்படியானால், வினாத்தாள் கசிவு வெளிநாட்டிலிருந்து ஏன் நடந்திருக்கக் கூடாது? எனும் சந்தேகம் வருகிறது,இந்த மாதிரியான முடிச்சுகள் இப்போது தான் அவிழ்க்கப்படுகிறது.
இந்த வழக்கின் போக்கைப் பார்க்கும்போது மீண்டும் மறுதேர்வென்பது சாத்தியமில்லை எனத் தெரிகிறது? ஏனென்றால், ஒரு தேர்வர் 2 ஆயிரம் கட்டணம் கட்டுகிறார். அதில் 28 லட்சம் பேர் கட்டியுள்ளனர். அப்படி வந்த மொத்தத் தொகையை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தத் தாள் கசிவு வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜாரகி வாதடி வருகிறார். நீட் தேர்வை நடத்துவது அரசு அல்ல. தேசிய தேர்வு முகமைதான் நடத்துகிறது. அது சுயேச்சையான அமைப்பு. அது மத்திய அரசின் ஒரு அங்கமில்லை. அப்படி இல்லாத போது எப்படி மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராகிறார்? அதுவே புரியாத புதிர்.தேசியத் தேர்வு முகமை அமைப்பை சீர்திருத்தக் கஸ்தூரி ரங்கன் கமிட்டி போட்டுள்ளோமென மத்திய அரசு வாதிட்டுள்ளது. அரசு சாரா அமைப்பை எப்படி அரசு கமிட்டி போட்டுச் சீர்திருத்த முடியும்? அதற்கெப்படி அதிகாரம் கொடுக்கப்படும்? இந்தத் தனிப்பட்ட அமைப்பு நீட் தேர்வுக்காக இவ்வளவு பணத்தை வசூல் செய்து என்ன செய்கிறது? அதை யாருக்கு வழங்குகிறது? இந்த வினாத் தாள் கசிவு தொடர்பாகப் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு தரப்பு மறுதேர்வு வேண்டுமென வாதிடுகிறது.
இன்னொரு தரப்போ வலியுறுத்தவில்லை. ஆகவே, அனைவரையும் ஒரு அணியாகக் கூடி ஒரு மனுவைத் தாக்கல் செய்ய சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார். ஆகவே அந்தப் பொது மனுவைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் மறு தேர்வு வேண்டாம் என ஒரு தரப்பு வழக்குப் போட்டுள்ளதில்லையா? அது மத்திய அரசின் ஏற்பாடாக இருக்குமென்றே சந்தேகம் எழுகிறது" என்கிறார்.இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது. அதனால் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இதே மாதிரியான ஒரு புகார் எழுந்தது. அந்த விவகாரம் நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள்