அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியது.டெல்லி யூனியன் பிரதேச அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை
நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த 6-ஆம் தேதி நீதிபதிகள் தெரிவித்த நிலையில் இன்று தீர்ப்பை வழங்கியதில், அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணிஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு உத்தரவாதத் தொகையாக ரூபாய். 10 லட்சம் கட்ட வேண்டும்; மேலும் அவரது கடவுச்சீட்டு அல்லது பாஸ்போர்ட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்; ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; சாட்சியங்களைக் கலைக்கக்கூடாது எனும் நிபந்தனைகளின் அடிப்படையில் சிசோடியாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றுகிறீர்களா என்பது கணக்கில் கொள்ளப்படுமென்றும் தெரிவித்தது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதே ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்தது. அதன் காரணமாக மணிஷ் சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்