பொன் மாணிக்கவேலைக் கைது செய்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் சிபிஐ உயர் நீதிமன்றத்தில் மனு இன்றும் தொடரும் விசாரணை
பொன் மாணிக்கவேலைக் கைது செய்து விசாரித்தால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை வெளிவரும் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சிபிஐ தரப்பில் தெரிவித்தது.முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், திருநெல்வேலியில் பழம்பெரும் கோவில் சிலைகள் விற்கப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி காதர் பாட்ஷாவுக்குத் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டதால் அவர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
தன்னைப் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராகப் பொய் வழக்குப் பதிவு செய்தததாகக் கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து பாலவாக்கத்திலுள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஏழரை மணிநேரம் சோதனை மற்றும் விசாரணை நடைப்பெற்றது. அதைத் தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவும் செய்த நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் FIR மீது சவால் செய்து மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நீதிமன்றம் டிஐஜி தரத்திற்குக் குறையாத அலுவலரைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு அவருக்கு அதிகாரமில்லை. அவ்வாறு இருக்கையில் அவர் என் மீது வழக்குப் பதிவு செய்தது ஏற்கத்தக்கதல்ல அது சட்டவிரோதமானது.
தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களைக் கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பைக் குலைக்கும் விதமாகவே உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்த மனு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்த போது, பொன் மாணிக்கவேலைக் கைது செய்து விசாரித்தால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரியவரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ சார்பில் எதிர்மனு தாக்கல் செய்த பின் தெரிவிக்கப்பட்டது.மேலும், சிலை கடத்தல்காரர்களுக்கு உதவுவதற்காகவே சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி காதர் பாட்ஷாவை பொய்யாக இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியது. முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை காப்பாற்றும் நோக்கில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டாரா? என்றும், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக ஆவணங்கள் உள்ளதா? என்றும் சிபிஐக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை இன்று ஒத்தி வைத்தது. இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில், “உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப் படியே பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” எனக் கூறப்படவே. பொன்.மாணிக்கவேல் தரப்பில், “என்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரப்பட்டதையடுத்து நீதிபதி, “பொன்.மாணிக்கவேல் மீது ஜாமீன் வழங்கக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதா அல்லது ஜாமீன் வழங்க முடியாத பிரிவுகளில் பதியப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நாளை ஆகஸ்ட்.30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்” என அறிவித்தார்.
கருத்துகள்