ஆசிரியர்கள் தினத்தில் நடைபெற்ற 16 வது 'எண்ணித்துணிக' நிகழ்ச்சியில்,
2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்தபாரதம் என்ற தேசிய இலக்கை ஆசிரியர்கள் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப அந்த இலக்கைக் கடந்து நாம் பயணிக்கும் வகையில் நமது பொறுப்புகளை நிறைவேற்றிட வேண்டும் என்றும் ஆளுநர் ரவி வலியுறுத்தினார். வளர்ந்து வரும் சக்திவாய்ந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்துவதும், புத்தாக்கத்தில் சிறந்து விளங்குவதற்கான அவர்களின் கனவுகள் நனவாக உந்தச்செய்து, கல்வியில் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தவும், மாணவர்களிடம் தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்டவும் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தார்,
போதைப்பொருள் துஷ்பிரயோகத்துக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்கவும் வலியுறுத்தினார்.ஆளுநர் ரவி அவர்கள், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராஜ் பவனில் உள்ள பாரதியார் மண்டபத்தில் தேசத்துக்கு முன்மாதிரியாக சேவை புரிந்த 17 ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை ஆளுநர் பாராட்டி கெளரவித்தார்.
நிகழ்வில் சரியான தரவுகளுடன் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியை விட அது குறைவாக உள்ளது, தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச் சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் கு. காமராஜர். அவர் தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார். துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தான் 60 சதவீதம் மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியை விட அது குறைவாக உள்ளது.
அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75 சதவீதம் மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40 சதவீதம் மாணவர்களால் அவர்களது பாடப் புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை. ஓர் ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவை நாம் மறுக்க முடியாது,” .என்றார்
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் ஆளுநரின் இந்தக் கருத்துக்கு பதிலளித்துள்ளனர். சென்னை வண்டலூரில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா கலந்துகொண்டு, 375 ஆசிரியர்கள்களுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கிய பின்னர் “மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்வி தான் சிறந்த கல்வி. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக் கல்வி தான் சிறந்த கல்வி. தமிழ்நாட்டு பாடத்திட்டத்தை படித்த பலர் விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக உள்ளனர். சிலர் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், வயிற்று எரிச்சலில் உள்ளனர்,” என்றார்.
சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலி யில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, “ஆளுநர் ரவி இதுபோன்ற தர்க்கமான வார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது என பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை.
‘சந்திரயான் 3’ திட்டம் உலகமே வியக்கும் அளவுக்கு பெருமை சேர்த்தது. வீரமுத்துவேல் என்பவர் இந்தத் திட்டத்தின் இயக்குநராக இருந்தவர். அவர் தமிழ்வழி கல்வி கற்றவர். அரசுப் பள்ளியில் பயின்றவர்.. இவர்கள் மட்டுமல்ல இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன், அதேபோல் இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, தற்போதுள்ள வனிதா, நிகர் ஷாஜி, நாராயணன், ராஜராஜன், சங்கரன் உள்ளிட்ட விஞ்ஞானிகளில் 90 சதவீதம் பேர் தமிழ்வழியில் பயின்றவர்கள், இவர்கள் தான் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். இது ஆளுநருக்கு தெரியாதா?” என்று பதிலளித்திருந்தார். (இதில் நமக்கு வரும் சந்தேகம் இவர்கள் படித்த காலத்தில் கல்வித் தரம் வேறு தற்போது உள்ள நிலை வேறு அதைத் தான் ஆளுநர் தெரிவித்தார் )
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் துரை வைகோ கருத்து : “ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாகவே உள்ளார். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது. ஆனால், நாம் மாநில கல்விக் கொள்கை போதும் என்கிறோம். மாநில பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு சமமாகவும், அதைவிட கூடுதலாகவும் உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்” என்றார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து: அவரது அறிக்கையில், “இன்று ஆசிரியர்களின் நிலையும், கல்வியின் தரமும் குறைந்து வருவது கவலையளிக்கும் உண்மை ஆகும். காலியாகி வரும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படுவதே இல்லை. தமிழ்நாட்டில் ஏற்கெனவே குறைக்கப்பட்ட பணியிடங்கள் போக, மீதமுள்ள பணியிடங்கள் கூட முழுமையாக இன்னும் நிரப்பப்படவில்லை. நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் கூட அப்படியே காலியாகத் தான் கிடக்கின்றன. காரணம் கேட்டால், நிதி நெருக்கடி என்று ஒற்றை வரியில் கடந்து செல்கிறது தமிழ்நாடு அரசு. உயிர் வாழ உயிர்வளி எவ்வளவு முக்கியமோ, அதை விட உயர்வுக்கு கல்வி முக்கியம். ஆனால், கல்வியின் முக்கியம் தமிழக அரசுக்கு தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றவும் தமிழ்நாடு அரசு உத்வேகம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியது கவனிக்கத்தக்கதாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து: “தமிழ்நாட்டில் பள்ளிக் கல்விப் பாடத்திட்டம் மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தை விட மிகவும் தாழ்வானது. தமிழ்நாடு மாணவர்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு பாடத்திட்டம் 2017 18-ஆம் கல்வி ஆண்டில், அப்போதைய பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் முழுமையாக திருத்தப்பட்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட்டது.
சிறந்த பாடப் புத்தகங்களும் உருவாக்கப்பட்டன. பாடத்திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் நானும் ஓர் உறுப்பினராக இருந்தேன். இன்றைய சூழலில் பிரச்சினை என்பது பாடத்திட்டத்தில் அல்ல. அரசு பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரத்தில் தான் உள்ளது. அர்ப்பணிப்பு இல்லாத, பொறுப்பற்ற தன்மையுடைய ஆசிரியர்களால் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மோசமான தரத்துக்கு சென்றுள்ளது. எனவே, பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார் .
கருத்துகள்