தொலைத் தொடர்பு சேவைகளை வளரும் நாடுகளுக்கு வழங்கும் நாடாக இந்தியா மாறத் தயாராக உள்ளதென அமைச்சர் பெருமிதம்
வளர்ந்து வரும் நாடுகளுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கிடைக்கச் செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: திரு பியூஷ் கோயல்
தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா மாறத் தயாராக உள்ளது என்றும், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் தரமான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குபவர்களாக இந்திய நிறுவனங்கள் மாறும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை மற்றும் இந்தியா மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர், எதிர்காலத்தில் இந்தியா சர்வதேச தொலைத் தொடர்பு விநியோகச் சங்கிலிகளை வழிநடத்தும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், நெட்வொர்க் இணைப்பில் இன்னும் பின்தங்கிய நாடுகளுக்கு தொலைத்தொடர்புகளை கொண்டு செல்ல உதவும் தீர்வுகளைக் கண்டறியுமாறு நிறுவனங்களை வலியுறுத்தினார். உலகளாவிய தெற்கில் தொழில்நுட்பம் கிடைக்கச் செய்வதிலும், உலகம் முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மலிவானதாக மாற்றுவதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கை நிறைவேற்றுவதில் உலகை வழிநடத்துவதிலும் இந்தியாவின் பங்கு உள்ளது. நாடு முழுவதும் தடையற்ற அகண்ட அலைவரிசை இணைப்பு வழங்கியது, 'உலகின் நம்பகமான பங்குதாரர்' என்ற புனைப்பெயரை இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
2015-ம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட முன்னோடி 'டிஜிட்டல் இந்தியா' பிரச்சாரத்தின் சாதனையாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இந்தியாவின் நிலையான நெட்வொர்க் இணைப்பை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். நல்லாட்சிக்கும், வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதற்கும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அவர் பாராட்டினார். இந்தியா இன்று ஒரே தேசமாக சிந்திக்கிறது என்று கூறிய திரு கோயல், இளைஞர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த நாட்டின் சிந்தனை செயல்முறையையும் நாட்டின் வளர்ச்சியை நோக்கி ஒருங்கிணைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும் தடையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர 2015-ம் ஆண்டில் டிஜிட்டல், உந்துதலுக்கு உதவியது என்று திரு கோயல் தொடர்ந்து கூறினார். நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்களுக்கு உயர் தரம், மலிவு மற்றும் செலவு குறைந்த தீர்வுகள் உறுதி செய்யப்படுகின்றன, மேலும் நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய திறன் மையங்களுக்காக இந்தியாவைப் பார்க்க அனுமதிக்கும் தடையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன என்றார்அவர்.
தொலைத்தொடர்பு சேவைகளில் புதிய கண்டுபிடிப்புகள், உபகரணங்கள், சேவைகள் மற்றும் தரவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் இந்தியா வளர்ந்த நாடுகளை விட மிகவும் முன்னணியில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். உலக தர நிர்ணய தினத்தை நேற்று இந்தியா கொண்டாடியதைக் குறிப்பிட்ட திரு கோயல், தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நாடாக இந்தியாவை மாற்ற அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்தியா செய்யும் ஒவ்வொரு செயலிலும் இந்தியாவின் வளர்ச்சி கதையை வரையறுக்கும் தரத்தின் முத்திரை இருக்கும் என்று அவர் கூறினார்.
"எதிர்காலம் இப்போது" என்ற நிகழ்ச்சியின் கருப்பொருளை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தியா அதன் எதிர்காலத்திற்கு மட்டுமல்லாமல், உலகின் எதிர்காலத்திற்கும் பங்களித்து வருகிறது என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வழங்குவது உலகை ஒரே குடும்பமாகக் கொண்டுவருவதில் ஒருங்கிணைந்த பங்கை வகிக்கிறது என்றும் கூறினார். இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிட்டல் மயமாக்கலின் முழு சுற்றுச்சூழல் அமைப்பும் இந்தியாவில் அதன் முத்திரையைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். இந்தியா அதன் கண்டுபிடிப்பு, திறமை மற்றும் அது வழங்கும் பெரிய சந்தைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதுமைப் படைப்புகள் இந்தியாவின் வளர்ச்சியை வரையறுக்கின்றன என்றும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், உலகம் முழுவதற்கும் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் இந்தியா முன்னோடியாக இருப்பதை உலகம் அங்கீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர், அதிநவீன தொழில்நுட்பத்தில் அவரது முன்னோடி பணி உலகளவில் பாராட்டப்பட்டுள்ளது என்றும், இளைஞர்களுடனான அவரது ஈடுபாடு எப்போதும் நாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப சாதனைகளில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதில் நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலை திரு கோயல் பாராட்டினார். உலகின் பிற பகுதிகளுக்கு இணையாக 5-ஜி தொழில்நுட்பத்தை இந்தியா அறிமுகப்படுத்தியதை சுட்டிக்காட்டிய அவர், மேலும் 6-ஜியை அறிமுகப்படுத்துவதிலும் உருவாக்குவதிலும் நாடு முன்னணியில் இருக்கும் என்று தெரிவித்தார். தேசிய அகண்ட அலைவரிசை இயக்கத்தின் மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் 5ஜி தொழில்நுட்பம் பயனடையும் என்று அவர் கூறினார்.
கருத்துகள்