வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுகே வழங்கிய அரசாணை சட்டபூர்வமாகச் செல்லுமா
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்த உத்தேசித்த, 5,000 ஏக்கர் மற்றும், 5 நம்பர் 'நோட்டீஸ்' அளித்த,
2,000 ஏக்கர் நிலத்தை, அதன் பழைய உரிமையாளர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளதாக, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்த போது : மாவட்டங்களில் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்டதில், 10,000 ஏக்கர் நிலம் எந்த நோக்கத்திற்காக கையகப்படுத்தியதோ அதற்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, மக்களின் நிலை அறிய. ஒவ்வொரு கோட்ட வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலும் புகார் பெட்டிகள் வைத்து மனுக்கள் பெறப்பட்டதன்படி, 16 இடங்களில் வைக்கப்பட்ட புகார் பெட்டிகள் மூலம், 4,488 புகார் மனுக்கள் வந்தன. அதை ஆய்வு செய்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன. எவ்வித நோட்டீசும் கொடுக்காமல், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலையில், 5,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில், அதன் உரிமையாளர்கள் வீடுகளைக் கட்டி வசித்து வருகின்றனர். அந்த நிலங்களை கையகப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
எனவே, இந்த நிலங்களை, வாரிய உத்தேசத் திட்டத்திலிருந்து விடுவிக்கிறோம். இது, அந்தந்த கோட்ட வீட்டு வசதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் வசிப்போர், வீட்டு வசதி வாரியத்தின் தடையின்மைச் சான்று பெற வேண்டிய தேவை இருக்காது.
இதேபோன்று, வாரியத்தின் சார்பில் நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்ட நிலையில், 2,000 ஏக்கர் நிலம் உள்ளது. இதிலும், மக்கள் வீடுகளை கட்டி வசித்து வருவதால், இந்த நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிடுவது என, முடிவு செய்து இருக்கிறோம். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எஞ்சிய 3,000 ஏக்கர் நிலம் தொடர்பான விஷயங்களில், சில உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்களும் வழக்கு தொடராதவர்களும், தங்களின் உரிமைகள் தொடர்பான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால், இந்த நிலங்கள் விடுவிக்கப்படும்.இன்னும் சில இடங்களில் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, இழப்பீட்டுத் தொகையும் இறுதி செய்து, வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டிருக்கும். இந்தத் தொகையையும், இது தொடர்பான பிற செலவு தொகைகளையும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கிறோம். -விளம்பரம்-
புதிதாக குடியிருப்புகள் கட்ட நிலம் தேவைப்பட்டால், நில தொகுப்பு திட்டம் வாயிலாக, உரிமையாளர் பங்களிப்புடன் புதிய வழிமுறைகள் கையாளப்படும். இழப்பீடு கொடுத்து கையகப்படுத்துவதை விட்டு விட முடிவு செய்கிறோம். அதாவது நிலமெடுப்பு இது தவிர, வாரியத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள நிலங்களை, வேலி அமைத்து முறையாகப் பாதுகாக்க, வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறோம். தேவைப்பட்டால் மீண்டும் புகார் பெட்டித் திட்டம் செயல்படுத்தப்படும்.
வாரியத்தின் திட்டங்களில் விற்காமல் உள்ள, 5,000 வீடுகளை, படிப்படியாக பொதுப் பிரிவினருக்கு வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்". எனத் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினைச் சந்தித்து, நில உரிமையாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நன்றி தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி, வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், வீட்டுவசதித் துறையின் செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர். வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் நிலங்கள் விடுவிப்பு - குறித்து முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஆக்கிரமிப்பு பயனாளிகள்
வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் விடுவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ;-
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை 4.10.2024 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில் முதற் கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் 2002.21 ஏக்கர் நிலங்களை நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கி, தங்களது நீண்ட கால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு அளித்ததற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பயனாளிகள் சந்தித்து, தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை வழங்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத இப்பிரச்சினை குறித்து அரசிடம் மனுக்கள் அளித்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சிறப்பு புகார் பெட்டிகள் 16 இடங்களில் அமைக்கப்பட்டு, அதன்மூலம் 4,488 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து முடிவு எடுக்க 10.10.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
குழுவின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு முதற்கட்டமாக, பல்வேறு மாவட்டங்களுக்குட்பட்ட 2002.21 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து தற்போது ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பயன்படுத்தப்படாத சூழ்நிலையில் அவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அவற்றையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஜி.எஸ். சமீரன் ஆகியோர் உடனிருந்தனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 2002.21 ஏக்கர் நிலங்களை நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பித்தது சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா என்பதே இப்போதைய எழு வினா? ஒரு நிலம் எந்த நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில் அதை யாரிடம் கையகப்படுத்தினார்களோ அவர்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும், அதை விடுத்து கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை போல அதை ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் வேறு நபர்களுக்கு சட்டத்தை திருத்தம் செய்யாமல் அரசாணை வெளியீடு செய்வது சட்டப் பூர்வமாக அது நீதிமன்றத்தில் தான் செல்லுபடியாகுமா ஆகாதா என்பது தெரியும். அதுவரை இந்த பிரச்சினையில் தீர்வு வராது என்பதே சட்ட வல்லுநர்கள் கருத்து.
கருத்துகள்