முறைகேடாக சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், எட்டு அரசு அலுவலர்களின் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் கர்நாடகா மாநிலத்தின் லோக் ஆயுக்தா
காவலர்கள் நேற்று முன்தினம் அதிரடியாக, சோதனை நடத்தியதில், கணக்கில் காட்டப்படாத 22.51 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், நகைகள், சொகுசு கார்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஊழலை ஒழிக்க லோக் பால் சட்டம் பிரிவு 63 ன்படி கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அமைப்பு நிறுவப்பட்டது. அரசு துறைகளில் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் முதல்வர் முதல் அலுவலர்கள், ஊழியர்களை கண்காணிப்பு செய்து பிடித்து, தண்டனை பெற்றுத் தருகிறது. ஆனாலும், ஊழல் செய்து லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் திருந்தவில்லைலோக் ஆயுக்தாவுக்கு வந்த பல்வேறு புகாரை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை பெலகாவி, ஹாவேரி, தாவணகெரே, கலபுரகி, மைசூரு, ராம்நகர், தார்வாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலர்கள் எட்டு பேரின் வீடுகள், மற்றும் அலுவலகங்களில், சோதனை நடத்தினர்.பெலகாவியில் கிராமக் கணக்காளர் விட்டல் சிவப்பா; வணிகவரித் துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ் மஜும்தார்; கிராம குடிநீர், வணிக துணை பிரிவு உதவி இன்ஜினியர் காசிநாத் பஜந்த்ரி; தாவணகெரேயில் வர்த்தகம், தொழில்துறை உதவி இயக்குனர் கமல்ராஜ்.பீதரில் மாவட்ட பயிற்சி மைய உதவி இயக்குனர் ரவீந்திர குமார்; மைசூரு மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் நாகேஷ்; ராம்நகர் கே.எஸ்.ஆர்.டி.சி., மெக்கானிக்கல் இன்ஜினியர் பிரகாஷ்; தார்வாடில் கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரிய உதவி செயல் இன்ஜினியர் கோவிந்தப்பா ஆகிய எட்டு பேரின் வீடு, அவர்கள் சார்ந்துள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, மொத்தம் 37 இடங்களில் சோதனை நடத்தினர். பெங்களூருவில் வணிக வரி துறை உதவி கமிஷனராக உள்ள வெங்கடேஷ் மஜும்தார், பெலகாவியில் பணியிலிருந்த போது அங்கு வாங்கிய வீட்டில் சோதனை நடத்தி, ரொக்கம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர் அதுபோன்று பெலகாவியின் நிப்பானியில் உள்ள போரகான் கிராமக் கணக்காளர் விட்டல் சிவப்பா வீடு, பண்ணை வீடுகளிலும் சோதனை நடத்தினர். இவர் ஏற்கனவே, சிக்கோடியில் இருந்து பாகல்கோடிற்கு முறைகேடாக 1.10 கோடி ரூபாய் கொண்டு வந்ததாகக் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, அவரின் வீட்டில் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தார்வாடில் கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டு வாரிய உதவி செயல் இன்ஜினியர் கோவிந்தப்பாவுக்கு சொந்தமாக, சவதத்தியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஆவணங்களை பறிமுதல் செய்தனர் ஹாவேரி பசவேஸ்வர நகரில் உள்ள கிராம குடிநீர், வணிக துணை பிரிவு உதவி இன்ஜினியர் காசிநாத் பஜந்த்ரி வீட்டிற்கு நேற்று முன்தினம் அலுவலர்கள் சென்றனர். ஜன்னல் வழியாக லோக் ஆயுக்தா காவலர்கள் வந்ததைப் பார்த்த காசிநாத், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணக்கட்டுகளை கட்டி, ஜன்னல் வழியாக வீசினார். கதவைத் திறந்த பின் உள்ளே வந்த அலுவலர்கள், ஜன்னல் வழியாக வெளியே வீசப்பட்ட பணத்தைப் பார்த்தனர். அத்துடன், காசிநாத்தின் படுக்கை அறையில் இருந்த 2 லட்சம் ரூபாய் என மொத்தம் 11 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மைசூரு மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் நாகேஷின், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள வாடகை வீடு, ஷிவமொக்கா, பெங்களூரில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தி, ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். தாவணகெரேயின் வர்த்தகம், தொழில்துறை உதவி இயக்குனர் கமல்ராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அவருக்கு சித்ரதுர்கா, தாவணகெரேயில் பல சொத்துக்கள், மூன்று பிளாட்கள், வீடு இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், இன்னோவா கார் குறித்த ஆவணங்களும் சிக்கின. இந்த சோதனையில், எட்டு அலுவலர்கள் தொடர்புடைய இடங்களிலும், 22.51 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள், சொகுசு கார்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஹாவேரியில் பெண்கள், குழந்தைகள் நலத்துறை துணை இயக்குனர் சீனிவாஸ் அல்தர்டி வீட்டிற்கு அலுவலர்கள் சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. அவரது மொபைல் போனில் லோக் ஆயுக்தா காவலர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன் தாயார் இறந்துவிட்டதால், யாத்கிருக்கு சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்லோக் ஆயுக்தாவினரும், விஷயத்தை கூறினர். அவரும் ஹாவேரி வருவதாக உறுதி அளித்தார். இதனால், நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல் பூட்டிய வீட்டின் வெளியே, லோக் ஆயுக்தா காவலர்கள் நின்றிருந்தனர். வெளியில் இருந்தபடியே காலை, மதிய உணவு சாப்பிட்டனர். ஆனால், வருவதாக கூறிய ஸ்ரீனிவாஸ் இரவு வரை வரவே இல்லை. கர்நாடகாவில் நேற்று நடந்த சோதனையில், எட்டு அலுவலர்கள் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில், 22.51 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் விபரம் வருமாறு:பெலகாவியில் கிராம கணக்காளர் விட்டல் சிவப்பா ரூ.1,08,52,244
வணிக வரி துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ் மஜும்தார் ரூ.2,21,43,900
ஹாவேரியில் கிராம குடிநீர், வணிக துணை பிரிவு உதவி இன்ஜினியர் காசிநாத் பஜந்த்ரி ரூ.3,20,72,000
தாவணகெரேயின் வர்த்தகம், தொழில்துறை உதவி இயக்குனர் கமல்ராஜ் ரூ.1,99,35,000
பீதரில் மாவட்ட பயிற்சி மைய உதவி இயக்குனர் ரவீந்திர குமார் ரூ.4,22,92,204
மைசூரு மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி நாகேஷ் ரூ.2,72,74,716
ராம்நகர் கே.எஸ்.ஆர்.டி.சி., மெக்கானிக்கல் இன்ஜினியர் பிரகாஷ் ரூ.4,26,00,700
தார்வாடில் கர்நாடக தொழில்பகுதி மேம்பாட்டு வாரிய உதவி செயல் இன்ஜினியர் கோவிந்தப்பா ரூ.2,79,22,300
மொத்தம் 22,50,93,064 பணம் கைப்பற்றிய நிலையில் இனி வழக்கு விபரங்கள் தெரியவரும்.
கருத்துகள்