பட்டாசு விபத்தில் உயிரிழப்போரின் குழந்தைகளுக்கு அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு செலவை அரசே ஏற்குமென தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம் ''பட்டாசு விபத்துகளில் இறக்கும், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்விக்கான செலவை அரசே ஏற்கும்,'' என, விருதுநகரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
விருதுநகரில், 77.12 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை அவரது இருக்கையில் அமர வைத்து புகைப்படம் எடுத்தார். பட்டம்புதுாரில் நடந்த அரசு விழாவில், 417 கோடியே 21 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை, 57,556 பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கு பேசிய போது: விருதுநகர் மாவட்டத்தில், 1,256 ஊரகக் குடியிருப்புகளுக்கு, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாத்தூர் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருப்பணிகள், ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில், 95 சதவீதம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன், கல்லுாரிக் கனவு திட்டத்தால் அதிகளவு மாணவர்கள் உயர்கல்விக்கு சேர்ந்துள்ளனர்.
இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு நல் ஆளுமை விருது வழங்கியுள்ளேன். பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்விக்கான செலவை அரசே ஏற்கும். மாவட்ட அளவிலேயே முடிவு செய்து ஆட்சியர் வழங்கக்கூடிய வகையில், இதற்கான தனி நிதியம் உருவாக்கப்படும். அதற்காக, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மக்களுக்கு பயனில்லாத திட்டங்களைக் கொண்டு வந்தேன் என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உளறுகிறார். எனக்கு சிரிப்புத் தான் வருகிறது. எதை பயனில்லாத திட்டம் என்கிறீர்கள். பழனிசாமி புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் நுாற்றாண்டு நுாலகம், 1.70 கோடி பேர் பெறும் மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை பயனில்லாத திட்டங்கள் என்று கூறுகிறீர்களா? திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்காமல், பதவிக்காக கரப்பான் பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்கள் பெயரையா வைக்க முடியும். எனப் பேசினார் விழாவில், அமைச்சர்கள் சாத்துார் கே.கே.எஸ்.எஸ். ஆர். இராமச்சந்திரன், எ.வா.வேலு, தங்கம் தென்னரசு, கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராமநாதபுரம் நவாஸ்கனி, விருதுநகர் மாணிக்கம் தாகூர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகுராமன், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள்