மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
-வழக்கு விசாரணையின்போது, அரசுத் தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், 'பாரம்பரிய வனவாசி' என்ற வரையறையின் கீழ் இடம்பெற மாட்டார்கள் என்றும் புலம்பெயர் தோட்டத் தொழிலாளர்கள் தான், எனவே தொடர்ந்து காட்டுப் பகுதியில் வசிக்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பு முன்வைத்த வாதத்தில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் தேயிலைத் தோட்டத்தை அரசு டான்டீ நிர்வாகத்துடன் இணைத்து மாஞ்சோலை மக்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அரசு தரப்பில் டான் டீ நஷ்டத்தில் இயங்குவதால் இந்த தேயிலை தோட்டத்தை சேர்க்க முடியாது என அரசு தரப்பில் வாதத்தை முன் வைத்தனர்.
பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டதை, வணிக நோக்கில் பயன்படுத்த முடியாது என்பதாலும், மனிதாபிமான அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து, வணிகக் கடன் வழங்குவதுடன், வீட்டு மனை, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் வீடுகள் உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்திருப்பதாகவும்,
தொழிலாளர்களுக்கு மணிமுத்தாறில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடியேறத் தயார் நிலையில் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதி காப்புக்காடு மற்றும் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பாடுகளைத் தொடர இயலாது என தெரிவித்ததோடு, இது அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும், அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றதால், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு நிறுவனம் இரண்டு மடங்கில் இழப்பீடு வழங்கியுள்ளதாகவும் தேயிலைத் தோட்ட நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பில் வழக்கறிஞர், "ஊழியர்களை விருப்ப ஓய்வு விண்ணப்பங்களில் வற்புறுத்திக் கையெழுத்திட வைத்ததாகவும், கையெழுத்திடவில்லை என்றால் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என மிரட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தேயிலையைத் தவிர ஏலக்காய் உள்ளிட்ட பிற விவசாயப் பொருட்களைப் பயிரிடுவதால், 'பாரம்பரிய வனவாசி' என்ற வரையறையின் கீழ், தோட்டத் தொழிலாளர்கள் வருவார்கள் என்றும், நாட தலைமுறைகளாக மாஞ்சோலையில் வாழ்ந்த தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு, தொழிலாளர்களின் விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசு தெரிவித்துள்ள அனைத்து சலுகைகளையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சார்ந்த மக்களைச் சோர்வடையச் செய்துள்ளதாக வக்கீல் ராபர்ட் சந்திரகுமார் தெரிவித்தார், "மாஞ்சோலை தோட்ட வழக்கைத் தொழிலாளர்களுக்கும், தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்னையாகப் பார்க்காமல் மூன்று தலைமுறை மக்களின் அடையாளமாகப் பார்க்க வேண்டும். என்பதால் தற்போது வந்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குத் தொடர மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் வழக்குத் தொடரப்படும்," என்றார்.
கருத்துகள்