மோசடிப் பணத்தில் வாங்கிய சொத்தை ஏலம் விடாமலிருக்க இலஞ்சம் பெற்ற வழக்கில் துணை வட்டாட்சியர் வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மதுரை வடக்கு தாலுகா தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியராக ஆர்.தனபாண்டி பணியாற்றினார் இவரது வீடு உத்தங்குடி பொன்மணி கார்டனில் உள்ளது.
இவர் 2021-ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி பிரிவில் தலைமை உதவியாளர் மற்றும் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தார்.
அப்போது பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்து அதில் மோசடி செய்யப்பட்ட பணத்தை திரும்ப கேட்டு பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மூன்று நபர்கள் டான்பிட் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பழனிச்சாமி, இளங்கோ ஆகியோருக்கு பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா மேலாண்மை இயக்குனர் ஜோசப் ஜெயராஜ் விற்பனை செய்த சொத்துக்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சொத்துக்களை பொது ஏலத்தில் விடும் பணியை அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராகப் பணிபுரிந்து தனபாண்டி கையாண்டார். இரு சொத்துக்களையும் பொது ஏலத்தில் விடுவதை தாமதப்படுத்த பழனிச்சாமி, இளங்கோ ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் ரூபாய்.1.65 லட்சமாகப் பெற்றதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனபாண்டி மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்தார். அதன் அடிப்படையில் உத்தங்குடி பொன்மேனி கார்டனின் உள்ள தனபாண்டி வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் ரமேஷ்பிரபு, பாரதிப்பிரியா ஆகியோர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கருத்துகள்