உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்ந்த பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவரது மகன் திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானதையடுத்து அத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து பத்தாயிரத்து 156 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 66,575 வாக்குகள் வித்தியாத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். ஈ.வே.ராமசாமி நாயக்கர் (பெரியார்) சகோதரர் ஈ.வே.கிருஷ்ணசாமியின் பேரன் மூத்த திராவிட தலைவர் ஈ.வே.கி.சம்பத் மற்றும் அதிமுகவில் முன்னணி தலைவர் சுலோக்ஷ்னா சம்பத் மகனவார். இவர் தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். தொடர்ந்து ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்,
தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நவம்பர் மாதம் 27 ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில்மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக அவ்வப்போது மருத்துவமனையில் வந்த தகவல் கூறியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பல தலைவர்கள் மத்தியில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தனது இரங்கல் செய்தியில்
"நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.
என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளாக தந்தைப் பெரியார், அண்ணல் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்ட போது, அவற்றில் தந்தைப் பெரியாரின் சிலையை இளங்கோவன் அவர்களை அழைத்துத் தான் திறக்கச் செய்தேன். தமிழ்நாட்டு அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் காலமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் பூத உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பின்னர், நடிகை குஷ்பூ கூறியதாவது,
"ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நல்ல தலைவர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. அவருக்கு ஈகோ கிடையாது. எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர். உலகமே தலைகீழாக நின்றாலும், கட்சிக்காக நான் பாடுபடுவேன் என்று கூறுவார். அப்படி ஒரு விசுவாசி அவர். நான் என் அண்ணனை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா, என் நண்பரை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா? அல்லது என்னுடைய குடும்பத்தின் மூத்தவரை இழந்து நிற்கிறேன் என்று சொல்வதா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் எப்போதும் உனக்கும் எனக்கும் போன ஜென்மத்து பந்தமுள்ளது. அது என்ன என்று சொல்லத் தெரியவில்லை' எனக் கூறுவார். எனக்கும் இன்று அப்படித்தான் தோன்றுகிறது. அவர் எப்போதும் நிச்சயமாக என் மனதிலிருப்பார். கட்சி ரீதியாக மட்டுமில்லாமல், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒரு நண்பரை இழந்துள்ளதாக உணர்கிறார்கள்.
அவர் மாதிரி இன்னொரு ஆள் வரமுடியாது. என்னுடைய அரசியல் பயணம், அவர் இருக்கும் போது தான் தொடங்கியது. அவர் தான் என்னை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தார். நான் காங்கிரஸை விட்டுப் பிரிந்த போதும் கூட, அவரிடம் அதே அன்பு, அதே மரியாதை, அதே பாசம் தொடர்ந்தது.
இன்று இந்த இழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பு. இதிலிருந்து எப்படி மீண்டு வருவேன் எனத் தெரியவில்லை. அவருடன் பழகியவர்களுக்குத் தான் அவருடைய மதிப்புத் தெரியும். அவரது தைரியம், உண்மையை மட்டும் பேச வேண்டும் என நினைப்பது, மனதில் பட்டதை பேசுவது போன்ற தைரியம் வேறு எந்தத் தலைவருக்கும் வராது" எனத் தெரிவித்தார். அரசியல் ரீதியாக நாமறிந்த வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஆதரவாளர், எப்போதும் அன்புக்கு குறை இல்லாக் குணக்குன்று!அசை போடுகிறேன். அரசியல் ரீதியாக மூத்த தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்திக்குப் பின்னர் ஒரு பண்புகள் நிறைந்த தலைவர் ஆகவே மனம் கலங்குகிறது. பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலுடன்
"போய் வா தலைவா! உன் காலம் அரசியல் பொற்காலம்!" இதுவே நமது அஞ்சலி.
கருத்துகள்