ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகிலுள்ள பள்ளபாளையம் தனசேகரன் பட்டா மாறுதல் உத்தரவு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இவரது பட்டா மாறுதல் மனு மீது பெருந்துறை தாலுகா மண்டலத் துணை வட்டாட்சியர் நல்லசாமி, பள்ளபாளையம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார் ஆகியோர் பட்டா மாறுதலுக்கான நடவடிக்கை எடுத்தனர். அப்போது பணி முடிந்ததும் ரூபாய்.15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று மண்டல துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரும் பேரம் பேசியதாகவும் அதற்கு தனசேகரனும் ஒப்புக்கொண்டார்
தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளார். ஆனால், தனசேகரன் கூறியபடி லஞ்சப்பணத்தை கொடுக்கவில்லை எனங் கூறப்படுகிறது. எனவே பணம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனசேகரன், இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தாராம்.
அதன்பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் ஆலோசனையின் பேரில், ஆய்வாளர் ரேகா தலைமையிலான குழுவினர் அறிவுரைகளின் படி, தனசேகரன் கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார், மண்டல துணை வட்டாட்சியர் நல்லசாமி ஆகியோருக்கு பணம் கொடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும் பணத்தை, எங்கே கொண்டு வருவது என்றும் கேட்டார். அதற்கு அவர்கள் பள்ளபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பணத்தைக் கொண்டு வரும் படி கூறினார்களாம்
அதைத் தொடர்ந்து நேற்று திட்டமிட்டபடி ஆய்வாளர் ரேகா தலைமையிலானகுழுவினர் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் மறைத்து கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்கு வந்த தனசேகரன் அரசு சாட்சியுடன் லஞ்சப்பணமாக ரூபாய்.15 ஆயிரத்தை சரத்குமாரிடம் கொடுத்தார்.
அதை அவர் கையில் வாங்கியதும் அங்கிருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அப்போது துணை வட்டாட்சியர் நல்லசாமியும் அங்கு வந்தார். தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்
கருத்துகள்