பொய் வழக்குப் போடும் காவல்துறை அலுவலர்கள் மீது வழக்குத் தொடர அரசின் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
பொய் வழக்குப் போடும் காவல்துறை அலுவலர்கள் மீது வழக்குத் தொடர அரசின் அனுமதி தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
நாட்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஊழல் செய்து தனிநபர்களுக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்து, போலியான ஆதாரங்களைத் தயாரிக்கும் காவல்துறை அலுவலர்கள் மீது வழக்குத் தொடர அரசி அனுமதி பெற வேண்டிய தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, ஒரு தனிநபருக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை அலுவலர், ஒருபோதும் தனது அலுவலகப் பணி என்ற போர்வையில், அவர் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விலக்குக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.
ஏனென்றால் ஒரு தனிநபர் மீது போலியாக வழக்குப் பதிவு செய்வதும், அது தொடர்பாக போலியான ஆதாரம் அல்லது ஆவணங்களைத் தயாரிப்பதும் ஒரு பொதுத்துறையில் பணியாற்றும் அலுவலரின் அலுவலகப் பணியின் ஒரு பகுதியாக இருக்கவே முடியாதென்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CRPC) பிரிவு 197 ன் படி அளிக்கும் பாதுகாப்பை தங்கள் அலுவல் பணிகளை அதிகாரங்கள் என நினைத்து தவறாகப் பயன்படுத்தும் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் அலுவலர்கள் அதைப் பயன்படுத்த அனுமதியளிக்க முடியாதென்றுமா தெரிவித்தது.
அரசுத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள், தங்களது கடமையின் போது இழைக்கும் ஏதேனும் தவறுகளுக்காக அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் பொதுத் துறை ஊழியர்களுக்காக கொண்டு வரப்பட்டதே குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 197 ஆகும். இந்தச் சட்டப்படி, இதுபோன்ற அரசு ஊழியர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடர அரசு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய பொறுப்பிலிருக்கும் பணியாளர்களான அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள்,
தனி நபர்களிடம் வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு தவறான குற்றச்சாட்டுகளை வாக்குமூலம் என தாங்கள் நினைத்ததை பதிவு செய்வது அல்லது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து அல்லது செய்து விடுவோம் என மிரட்டுவது போன்றவற்றின் மூலம், தங்களது பணியை கடமையை மறந்து அலுவல் பணியை அதிகாரம் என தவறாக நினைத்துப் பயன்படுத்துவது அல்லது துஷ்பிரயோகம் செய்ய இந்த சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது. குற்றம்சாட்டப்பட்டவர்களை சட்டத்துக்கு விரோதமாக காவலில் வைத்திருப்பது, ஒருவர் மீது ஊழல் செய்து போலியான வழக்குகளைப் பதிவு செய்து போலியான ஆதாரம் அல்லது ஆவணங்களைத் தயாரிப்பது, அவர்களை துன்புறுத்தும் வகையில் இருப்பிடங்களில் சோதனை நடத்துவது போன்றவற்றில் ஈடுபடுவோர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 197 அளிக்கும் பாதுகாப்பின் கீழ் வர முடியாதென்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.
எப்போது ஒரு காவல்துறை அலுவலர் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுகிறதோ, அப்போதே அவர் சட்டப்பிரிவு 197 ன் பயனை அடைய முடியாதென்றும், மக்கள் அல்லது தனி நபர்கள் மீது போலியான வழக்குத் தொடர்ந்து ஆதாரங்களை உருவாக்குவது அல்லது போலியான ஆவணங்களைத் தயாரிப்பது என்பது அலுவல் ரீதியான பணியாக இருக்க முடியாதென்பதால், இந்தச் சட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
ஒருவேளை அவ்வாறு செய்ய அனுமதித்தால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காவல்துறையினர், அந்தப் பொறுப்பில் அல்லது பணியில் இருந்து கொண்டு சட்டத்துக்கு விரோதமான, மிகத் தவறான செயல்களைச் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய நபர் மீது, கொலை நடந்த அதே நாளில் அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் மதுபானங்களைக் கடத்தியதாக வேறு ஒரு பொய் வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
கருத்துகள்