அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில்; திமுகவிற்கு எதிராகச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காவலர் பணியிடை நீக்கம்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் அரசியல் கட்சியினர் நடத்தி வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை பலரும் பதிவிட்டனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் வேலூர் கிராமியக் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றும் அன்பரசன் அவருடைய முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் வகையில் கமெண்ட் பாக்சில் கருத்தைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அது குறித்த வேலூர் மாவட்டக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் காவல் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொணடதற்குப் பின் காவலர் அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
அது தொடர்பாக காவல் துறை வட்டாரங்களில் கூறுகையில் "முகநூல் பக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக காவலர் அன்பரசன் கருத்து பதிவு செய்துள்ளார். இது சீருடை பணியாளர்கள் விதிகளுக்கு எதிரானது. அதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டது. முகநூல் பக்கத்திலிருந்த அவரது கருத்து நீக்கப்பட்டதுடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள்