விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில்
ஆறு நபர்கள் பலி. சட்ட விதிமுறை மீறி குத்தகைக்கு நடத்திய நபர்கள் தான் விபத்துக்குக் காரணம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமானதில் ஆறு நபர்கள் உயிரிழந்தனர். இந்த ஆலையை சட்ட விதிமுறைகளை மீறி குத்தகைக்கு விட்டதுடன், அனுபவமில்லாத போர்மேன் உள்ளிட்ட தொழிலாளர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட காரணங்களால் விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவகாசி தாலுகா
ஆலமரத்துபட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் விருதுநகர் அருகே வச்சகாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்துகிறார். இந்த ஆலையில் உள்ள 84 அறைகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 84 தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்த நிலையில். பட்டாசு உற்பத்திக்கான பாஸ்பரஸ் மற்றும் கந்தகம் உள்ளிட்ட இரசாயனப் பொருட்களை கலவை செய்யும் போது, காலை 9.40 மணி அளவில் அதிக உராய்வு காரணமாக திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருந்துகள் கலவை செய்யும் கோட்டை சுவர் அறை, வேதிப்பொருட்கள் அறை உள்ளிட்ட நான்கு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. தகவலறிந்த பின்னர் வந்த விருதுநகர், சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.இந்த விபத்தில் குருந்தமடத்தை சேர்ந்த வேல்முருகன் (வயது 54), காமராஜ், செட்டிக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ் (வயது 37), வீரார்பட்டியை சேர்ந்த கண்ணன், அருப்புக்கோட்டையை சேர்ந்த மீனாட்சிசுந்தரம்(வயது 46), சிவக்குமார் (வயது 56) ஆகிய ஆறு நபர்களில் ஒருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதின் என்பவர் பலத்த காயமடைந்தார். விபத்து நிகழ்வு குறித்து வழக்குப் பதிவு செய்த வச்சகாரப்பட்டி காவல்நிலையத்தில் போர்மேன்கள் பாண்டியராஜ் (வயது 23) பிரகாஷ் (வயது 27) ஆகியோரைத் தேடி வருகின்றனர். அவர்களைப் பிடித்து விசாரித்தால் விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரியவருமென காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.
கருத்துகள்