'இந்தியக் கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்' - நாக்பூரில் பிரதமர் பெருமிதம்
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என நாக்பூர் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனர்களான டாக்டர் கேசவ பலராம் ஹெட்ஹெவர், குருஜி எம்.எஸ். கோல்வர்க்கர் ஆகியோர் நினைவிடமான ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் அங்கு மாதவ் நேத்ராலயா பிரிமீயம் மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
நரேந்திர மோடி பிரதமரான பின்னர் ஆர்எஸ்எஸ் தலைமையகம் செல்வது முதல்முறை அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: நாட்டில் ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளும் மருத்துவர்கள் ஆகவேண்டும் என்பதற்காக நாங்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் வசதியை ஏற்படுத்தினோம். மருத்துவக் கல்லூரிகளை இரட்டிப்பாக்கியதோடு இல்லாமல், நாட்டில் செயல்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். அதேபோல் மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கைகளையும் இரட்டிப்பாக்கியுள்ளோம். தகுதி வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே அரசின் குறிக்கோள் என்றார்.
ஸ்மிருதி மந்திருக்கு சென்றது குறித்துப் பேசிய பிரதமர், “இன்று நாக்பூரிலுள்ள சேவா சங்கத்தின் புனித லட்சியத்தின் மற்றுமொரு விரிவாக்கத்துக்கு சாட்சிகளாக நாம் இருக்கிறோம். புனித ராஷ்ட்ரா யாக்யா சடங்கு நாளில் இங்கு வந்திருப்பது எனது பாக்கியம். சைத்ர சுக்ல பிரதிபடா நாளான இன்று சிறப்பான ஒரு நாள். புனித நவராத்திரி இன்றிலிருந்து தொடங்குகிறது. இன்று நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குடி பட்வா, யுஹாதி, நவ்ரேஜ் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் தனது நூறு ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறது. இந்த சிறப்பான நாளில் ஸ்மிருதி மந்திருக்கு செல்லும், டாக்டர் சாகேப் மற்றும் குருஜிக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
டாக்டரும், குருஜியும் நாட்டுக்கு புதிய ஆற்றலைக் கொடுத்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட சித்தாந்தத்தின் விதை, இன்று உலகின் முன்பு பெரிய விருட்ஷமாக வளர்ந்துள்ளது. கொள்கைகளும், மதிப்புகளும் இந்த மரத்திற்கு உயர்ந்த உயரத்தை கொடுத்துள்ளன. லட்சக்கணக்கான சுயம் சேவகர்களே அதன் கிளைகள். இது சாதாரணமான மரமல்ல, இது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்றார்
கருத்துகள்