ரயிலில் தவறி மரணமடைந்த பயணியின் உடைமையிலிருந்து மூவாயிரம் ரூபாய் திருடிய சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்
கேரளா எர்ணாகுளம் அருகில் ரயிலில் தவறி விழுந்து பலியான தொழிலாளியின்
பணப்பையிலிருந்து மூவாயிரம் ரூபாய் திருடிய சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதுல் கோகோய் (வயது 27). தொழிலாளி. மார்ச் மாதம் 19 ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகில் ரயிலில் பயணம் சென்ற போது தவறிக் கீழே விழுந்ததில் இறந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய ஆலுவா ரயில்வே காவல்துறை பிரேதப் பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான தொழிலாளியின் செல்போன், பர்ஸ் உள்பட உடமைகள் ஆலுவா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.அந்த பணப் பையில் எட்டாயிரம் ரூபாய் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜிதுல் கோகோயின் உடமைகளை வாங்குவதற்காக அவரது உறவினர்கள் வந்திருந்த போது பர்சில் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்ததில் அன்றைய தினம் பணியிலிருந்த சார்பு ஆய்வாளர் சலீம் பணப் பையிலிருந்து பணத்தைத் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. தொடர்பான விசாரணைக்குப் பின்னர் சார்பு ஆய்வாளர் சலீமை காவல் துறைக் கண்காணிப்பாளர் வைபவ் சக்சேனா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள்